search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மா சுப்பிரமணியன்"

    • இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • பரிசோதனையில் 4 ஆயிரத்து 56 நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    சென்னை :

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் கடந்த 24-ந்தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 885 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டுள்ளனர்.

    இந்த மருத்துவ முகாமில் 35 ஆயிரத்து 138 பேர் சித்தா மற்றும் இந்திய மருத்துவத்திற்காக பதிவு செய்து பரிசோதனை செய்து கொண்டனர்.

    இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பரிசோதித்து நோய் கண்டறியப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

    * மருத்துவ முகாமில் வினியோகிக்கப்பட்ட மருந்துகளின் செலவு தொகை ரூ.42 லட்சத்து 31 ஆயிரத்து 404 ஆகும்.

    * நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்காக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 48 பேர் பரிசோதித்து கொண்டனர்.

    * நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று 14 ஆயிரத்து 471 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் 4 ஆயிரத்து 56 நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    * ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று 19 ஆயிரத்து 217 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் 5 ஆயிரத்து 576 ரத்த அழுத்த நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    * நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று 8 ஆயிரத்து 333 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் இந்த 2 நோய்களினாலும் 2 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    * கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை 7 ஆயிரத்து 849 பேர் மேற்கொண்டனர். இதில் 762 பேருக்கு கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டது.

    * மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை 8 ஆயிரத்து 712 பேர் மேற்கொண்டனர். இதில் 1,176 பேருக்கு மார்பக புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டது.

    * ரத்த சோகை கண்டறியும் பரிசோதனையை 44 ஆயிரத்து 165 பேர் செய்துகொண்டனர். இதில் 5 ஆயிரத்து 492 பேருக்கு ரத்த சோகை இருப்பது தெரிய வந்தது.

    * சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் பரிசோதனையை 28 ஆயிரத்து 553 பேர் செய்து கொண்டனர். இதில் 785 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    * ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து கண்டறியும் பரிசோதனையை 28 ஆயிரத்து 658 பேர் மேற்கொண்டனர். இதில் 1,299 பேருக்கு ரத்த கொழுப்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது.

    * 12 ஆயிரத்து 817 பேர் காசநோய் பரிசோதனை மேற்கொண்டனர். சளி பரிசோதனைக்கான 4 ஆயிரத்து 366 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 289 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * 12 ஆயிரத்து 591 பேர் தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 133 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேல் பரிசோதனையில் 14 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

    * கொரோனா பரிசோதனை 936 பேர் செய்து கொண்டனர்.

    * பல் பரிசோதனையை 13 ஆயிரத்து 685 பேர் மேற்கொண்டனர். இதில் 1,565 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * இ.சி.ஜி. பரிசோதனையை 14 ஆயிரத்து 894 பேர் எடுத்துக் கொண்டனர். இதில் 1,238 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * 'எக்கோ' பரிசோதனையை 7 ஆயிரத்து 20 பேர் எடுத்துக் கொண்டனர். இதில் 715 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 13 ஆயிரத்து 125 பேர் பதிவு செய்து கொண்டனர்.

    * தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 852 பேர் கண் கண்ணாடி பெற்றனர்.

    இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

    • ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
    • எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சென்னை:

    அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் அறை எண். 435-ல் தற்போது செந்தில்பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார். மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் பூரண குணம் அடைவார்.

    எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது கூட மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டேன்.

    இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • 8 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படும் இந்த பாதையின் இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும்.
    • இலவசமாக சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனையும் செய்யப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கியத்துக்கான நடைபயிற்சி பாதை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து இருந்தார். இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. மதுரையில் நடைபெறும் பணிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

    இந்த நடைபாதை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    உடல் ஆரோக்கியத்துக்கு நடைபயிற்சி முக்கியம். எனவே மக்களிடம் நடை பயிற்சியை ஊக்குவிக்கவும், நடை பயிற்சிக்கான சூழலை உருவாக்கி தருவதும் தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

    8 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படும் இந்த பாதையின் இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும். ஆசுவாசப்படுத்திக் கொள்ள பெஞ்ச் அமைக்கப்பட்டிருக்கும். கி.மீ. அளவு பொறிக்கப்பட்ட போர்டுகள் இருக்கும். ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு குறிப்புகள் இருக்கும்.

    மாதம் தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமை சுகாதாரத் துறை அதிகாரிகள் நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம் கலந்துரையாடுவார்கள். சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.

    இலவசமாக சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனையும் செய்யப்படும். வாரத்தில் ஒரு நாள் தண்ணீர், பழம் இலவசமாக வழங்கப்படும். நடை பயிற்சி செய்வோர் நல குழுக்களும் இதில் பங்கேற்கலாம்.

    ஜப்பானில் இதேபோல் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததை பார்த்து முதலஅமைச்சரிடம் தெரிவித்தேன். அவர் 38 மாவட்டங்களிலும் அமைக்கும்படி உத்தரவிட்டார். அனைத்து மாவட்டங்களிலும் பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார்.
    • கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் வருகிற 24-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் அடைப்புகள் இருந்ததால் நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.

    அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார். அதன் பிறகு அவருக்கு மயக்கம் தெளிந்தது.

    இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது.

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் வருகிற 24-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதற்காக 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. இதில் பல் மருத்துவம், காச நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா காலத்தில் சித்தா கொரோனா மருத்துவ மையம் உருவாக்கப்பட்டு பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

    சென்னை :

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாநகரில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா பயிற்சி மேற்கொண்டார். இதேபோல, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கமிஷனர் மைதிலி கே.ராஜேந்திரன் ஆகியோரும் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ மையங்கள், பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகள் என 178 இடங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி, ஓமியோபதி போன்ற 5 வகையான மருத்துவ முறைகளுக்கும் கல்லூரிகள் செயல்படுகின்றது. கொரோனா பேரிடர் காலத்தில் சித்தா கொரோனா மருத்துவ மையம் உருவாக்கப்பட்டு பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் 36 பூங்காக்களில் யோகா மேடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்கின்ற வகையில் முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பினார். ஆனால், கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. தொடர்ச்சியாக கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினாலும், இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக கவர்னர்தான் இருக்க வேண்டும் என்றும், துணை வேந்தர்களை கவர்னர்தான் நியமிக்க வேண்டும் என்றும் பதில் கூறி வருகின்றனர்.

    குஜராத், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற சூழ்நிலை வந்தபோது மாநில முதல்-அமைச்சரே துணை வேந்தர்களை நியமித்து கொள்ளலாம் என்று சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டது.

    தமிழ்நாட்டு மக்களிடம் சித்த மருத்துவத்திற்கு நிறைய ஆதரவு இருப்பதால், இங்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கவர்னர் ஒப்புதல் அளித்தால் இந்தியாவிலேயே முதல் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அமைந்தது என்கின்ற பெருமை கிடைக்கும்

    அனைத்து துறைகளிலும் சிறப்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அந்த வகையில் வரும் 24-ந் தேதி அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என 30 துறைகளை ஒருங்கிணைத்து பெரிய அளவில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அன்றைய தினம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சார்பாக 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. காலை முதல் மாலை 5 மணி வரை இம்முகாம்கள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர்ந்து மழை பெய்ததால் மதியம் வரை மக்கள் சிரமப்பட்டனர்.
    • நேற்றிரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய லேசான மழை பெய்தது.

    சென்னை:

    சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    கோயம்பேடு, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், பெரிய மேடு, வேப்பேரி, கிண்டி, வேளச்சேரி, அடையார், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், கிண்டி, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி, அம்பத்தூர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் மதியம் வரை மக்கள் சிரமப்பட்டனர். மாலையில் தான் தண்ணீர் வடிந்து நிலைமை சரியானது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்ததால் சென்னை மழை பாதிப்பை அங்கிருந்தபடியே கேட்டு அமைச்சர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார். போர்க்கால அடிப்படையில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

    அதன் அடிப்படையில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் அதிகாரிகளுடன் மழை பாதிப்பு நிலவரங்களை பார்வையிட்டு தேவையான பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்றிரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய லேசான மழை பெய்தது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மூத்த அமைச்சர்கள் கண்காணிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர்களை சென்னையிலேயே இருந்து மழை பாதிப்புகளை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று அமைச்சர்கள் மழை பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • செந்தில்பாலாஜிக்கு ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்த செலவில் விரும்பும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற கோர்ட்டு அனுமதித்தது.

    இந்த நிலையில் இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருக்கு உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மருத்துவர்கள் எடுத்துள்ளார்கள். ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும். அதன் பிறகு தான் ஆபரேசன் செய்ய முடியும். இல்லாவிட்டால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி விடும். எனவே ஆபரேசன் நடைபெற இன்னும் 4 அல்லது 5 நாட்கள் ஆகலாம் என்றார்.

    பின்னர் அவரிடம் எய்ம்ஸ் மருத்துவ குழு வருவதாக கூறப்படுவது பற்றி கேட்டதற்கு கோர்ட்டில் வக்கீல் இளங்கோ தாராளமாக எய்ம்ஸ் மருத்துவ குழு வந்து பரிசோதித்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். தாராளமாக அவர்களும் வந்து பரிசோதிக்கட்டும் என்றார்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மூத்த டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான எங்கள் நிபுணர்கள் குழு அவரை பரிசோதித்தது.

    ஆரம்ப கால 'கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராப்ட்' அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை வழங்கிய அறுவை சிகிச்சை நிபுணர், அவர் மயக்க மருந்துக்கான உடற்தகுதியை மதிப்பிடுவதற்கு மேலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்படும்.

    தற்போது இதய கண்காணிப்புடன் ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
    • மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை போன்ற மாய தோற்றத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி, மருத்துவ கல்லூரி, தருமபுரி மருத்துவ கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளையும் ஆய்வு செய்த தேசிய மருத்துவ கவுன்சில் சில குறைபாடுகளை கண்டுபிடித்தது. இதையடுத்து இந்த 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

    இதனால் இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, எந்த மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்தாகாது. ரத்து செய்யப்படும் அளவுக்கு அரசு நடந்து கொள்ளாது என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை தயார் செய்து தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் குழு டெல்லி சென்று அறிக்கை கொடுத்தது.

    அதன் பேரில் டெல்லி மருத்துவ குழுவினர் மீண்டும் தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்து சென்றனர்.

    இந்த நிலையில் சைதாப்பேட்டையில் இன்று இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை போன்ற மாய தோற்றத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.

    ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, தருமபுரி மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயங்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி, அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்ட நோட்டீசையும் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.

    திருச்சி மருத்துவ கல்லூரியில் இன்று ஆய்வு நடக்கிறது. ஆய்வு முடிந்ததும் அந்த கல்லூரியும் தொடர்ந்து இயங்க அனுமதி கிடைத்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, டெல்லியில் அறிக்கை கொடுக்கப்பட்டது.
    • மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் எக்காரணத்தைக் கொண்டும் ரத்தாகாது.

    சென்னை:

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே புதிதாக மாநகராட்சி சார்பில் ரூபாய் 28 லட்சம் செலவில் அமைக்கப்படும் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகளான ஸ்டான்லி, தர்மபுரி உள்பட மூன்று கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா, பயோ மெட்ரிக் வருகை பதிவேடு ஆகிய சிறு, சிறு குறைகளுக்காக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பது போன்று தகவல் வெளியிடப்பட்டது.

    தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, டெல்லியில் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தேசிய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

    இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் எக்காரணத்தைக் கொண்டும் ரத்தாகாது. ரத்தாகும் அ ளவிற்கு தமிழக அரசு விடாது. இன்று அல்லது நாளைக்குள் டெல்லியில் இருந்து அறிவிப்பு வரும்.

    இந்த விவகாரத்தில் மருத்துவ கவுன்சில் கொஞ்சம் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தாததால் சின்ன விஷயம் பெரிதாக்கப்பட்டு விட்டது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதார மந்திரி உள்பட இரண்டு மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கு நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்ததும் நேரில் சென்று சந்தித்து பேசுவோம்.

    தமிழக கவர்னர் சிதம்பரம் சிறுமிகள் விஷயத்தில் தவறாக பேசிவிட்டார்.

    அதேபோல், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஆனந்தும் தவறாக பேசினார். அதுபற்றிய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. ஆனால், சின்ன குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த பிரச்சினையை மேற் கொண்டு பேச விரும்பவில்லை.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், கவர்னரும் விமர்சித்திருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மீதும், நலனின் மீதும் அக்கறையில்லாதவர்கள் தான் இவ்வாறு விமர்சிப்பார்கள். இது எல்லோருக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள், நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்களுடன் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்ட முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமக்கு நாமே திட்டத்தின் மூலம் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில், 500 ஆஸ்பத்திரிகள் முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

    இந்த ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான டாக்டர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை மாவட்ட சுகாதார அமைப்பு என்கின்ற அமைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைகளை தேர்ந்தெடுத்து இருபுறமும் மரங்களை நட்டு மக்கள் தினந்தோறும் நடை பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அரசு சார்பில் 6 நர்சிங் பயிற்சி கல்லூரியும், 25 நர்சிங் பயிற்சி பள்ளியும் உள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கு தலா 100 இடங்களுடன் 11 புதிய நர்சிங் பயிற்சி கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ள தகவல்கள் தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் டெண்டர்களை கோரி உள்ளனர் என சிஏஜி தெரிவித்துள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறையிலும் முறைகேடு நடந்துள்ளது.

    60:40 என்ற மத்திய மாநில அரசுகளின் நிதியில் காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டறை நவீன மயமாக்கும் திட்டத்தில் கடந்த அதிமுக அரசின் அலட்சியத்தால் காவல்துறைக்கு ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டி காக்கும் காவல்துறையை நவீனப்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்திருக்கிறது அதிமுக அரசு.

    தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தை அதிமுக அரசு தவறாக பயன்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக அரசில், இலவச லேப்டாப் திட்டத்தில் ரூ.68.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; காலணி வழங்கும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீண் செய்யப்பட்டுள்ளது.

    5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், அதிமுக அரசு முறைகேடு செய்துள்ளது.

    தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீடிக்கிறது. தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.
    • புகழே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பட்டிமன்றம் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் குமரேசன் ஏற்பாட்டில் மதுரவாயல், மதுரவாயல் வடக்கு பகுதி 147-வது வட்டம் புஷ்பா கார்டன் பகுதியில் நடைபெற்றது.

    பட்டிமன்றத்தை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன், மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளரும், எம். எல். ஏ. வுமான காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.

    வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது-பொருளே, புகழே என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பொருளே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், அருள்பிரகாஷ் ஆகியோரும், புகழே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா எம். எல். ஏ., மதுரவாயல் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளரும், 11-வது மண்டல குழு தலை வருமான நொளம்பூர் வே. ராஜன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் ஆலப் பாக்கம் கு.சண்முகம், 147-வது வட்ட செயலாளர் எஸ்.ஜி.மாதவன், பகுதி நிர்வா கிகள் பாலாஜி, செந்தில் சுரேஷ், உதயகுமார், அண்ணாதாசன், சசிகுமார், ஸ்டாலின், ஆலன், ரூபன், மதியழகன், கவுன்சிலர்கள் மாலினி, ரமணி மாதவன், பாரதி அண்ணா வேலன், செல்வி ரமேஷ், ஹேமலதா கணபதி, நிர்வாகிகள் ரமேஷ் ராஜ், ரமேஷ், புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×